Thursday, March 21, 2013

வில்லனாக இருந்து நாயகனாக மாறிய சௌந்தரராஜா

கொலிவுட்டில் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் சௌந்தரராஜா.
அடுத்தடுத்து "நளனும் நந்தினியும்" படத்தில் முக்கியமான கதாபாத்திரம், "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்" படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பன், "வேல்முருகன் போர்வெல்ஸ்" படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று நடித்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் இப்போது கதாநாயகனாக புரமோஷன் பெற்ற சந்தோசத்தில் இருக்கிறார்.
லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் வீந்தர் சந்திரசேகர் இயக்குநராக அவதாரம் எடுக்கும் "ஐ.நா" படத்தில் நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆகிறார் சௌந்தரராஜா.
வில்லனாக இருந்து நாயகனாக மாறிய அனுபவம் குறித்து சௌந்தரராஜா கூறுகையில், எலக்டரானிக் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன் என்ஜினியரிங் படிச்சேன். வெளிநாட்டுல வேலை கெடைச்சது. சிங்கப்பூர், லண்டன், துபாய் என வெளிநாட்டு வேலைக்கும் சம்பளத்துக்கும் குறைவில்லை.
ஆனால், மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு குறையிற மாதிரி தோணிச்சு. ஆறேழு வருஷமா வேலை செஞ்சு சம்பாதிச்ச சில லட்சங்களை எடுத்துக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன்.
எனக்குள்ள இருந்த சினிமா கனவு என்னை உசுப்பி விட்டுச்சு. நண்பர்களோட சேர்ந்து ஏகப்பட்ட குறும்படங்களை தயாரிச்சேன். நிறைய விருதுகள் கெடைச்சது. ஒரு பக்கம் குறும்படங்கள்... ஆனா இன்னொரு பக்கம் கம்பெனி கம்பெனியா நடிக்க சான்ஸ் கேட்டு அலைஞ்சேன்.
அப்படி ஆறு வருடம் அலைஞ்சதின் பலனாக சுந்தரபாண்டியன்ல வாய்ப்பு கெடைச்சது. சந்தோசமா உணர்ந்தேன். நிறைய பாராட்டுக்கள். ஆனா, மறுபடியும் வாய்ப்பு தேடும் படலம் தொடர்ந்தது.
"நளனும் நந்தினியும்", "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்", "வேல்முருகன் போர்வெல்ஸ்"னு வாய்ப்பு கெடைச்சது. நளனும் நந்தினியும் படத்தில நடிக்கிறப்போ தான், லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர், ரவீந்தர் சந்திரசேகரன் சார் நட்பு கெடைச்சது.
என்னோட விடாமுயற்சி, உழைப்பையும் பார்த்த ரவீந்தர் சந்திரசேகரன் சார் எனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார்.
ஏற்கனவே நாலு படங்கள் லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பில இருந்தாலும் அஞ்சாவதா ஒரு படம் பண்ணப்போறோம், அதுல நீங்க மெயின் ரோல்ல நடிக்கிறீங்க என்றார்.
எனக்கு இன்ப அதிர்ச்சி. எவ்ளோ நாள் போராட்டம் இப்டி ஒரு இடத்தை அடையிறதுக்குன்னு நெனைச்சேன். கூடவே இன்னொரு சர்ப்ரைஸ் செய்தியா அந்த படத்தை நானே இயக்கப்போறதாவும் அவர் சொல்லவும் இன்னும் சந்தோசமாயிருச்சி.
ஏன்னா, சினிமாவை வெறிபிடிச்சி நேசிக்கிற தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சார். படத்துக்கு பேரு ஐநா. ஆறேழு நாடுகள்ல நடக்கிற அதிரடி கதையில இந்திய காவல்துறை அதிகாரியா நான் நடிக்கிறேன்.
தமிழ் சினிமாவில் வில்லனா அறிமுகமாகி அப்புறம் கதாநாயகர்களாக ஆகி பட்டைய கிளப்புற மூத்த நடிகர்களுக்கெல்லாம் மானசீகமா மனசுக்குள்ள ஒரு வணக்கம் வச்சேன்.
நம்மளுக்கும் அதே மாதிரி ஒரு சின்ன பாதை கெடைச்சிருக்குன்னு நெனைச்சி சந்தோசமா இருக்கேன். யதார்த்தமான வேற சில கதைகளிலயும் கதைநாயகனாக நடிக்க கேட்டிருக்காங்க. நான் நேசிக்கிற, நான் நம்புற சினிமா... என்னைக் கைவிடாதுங்கிற நம்பிக்கை எனக்கு எப்பவும் இருக்கு.
நாளைக்கு மதுரையில வே.வ.வெ.(வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்) படப்பிடிப்புக்கு கௌம்பிட்டிருக்கேன் பாஸ் என்று தான் நாயகனான கதையை சந்தோசமாக சொல்கிறார் சௌந்தரராஜா.

No comments:

Post a Comment